×

புதிதாக அமைத்த பைப்லைன் 3 மாதத்தில் சேதம்: குடிநீர் திட்ட பணியில் பல லட்சம் முறைகேடு: கண்ணதாசன் நகர் மக்கள் குற்றச்சாட்டு

பெரம்பூர், :  சென்னையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும். இதை சமாளிக்க குடிநீர் வாரியம் சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் லாரிகளில் தண்ணீர் அனுப்புவது 90 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கும்படி குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், சில இடங்களில் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் தினமும் காலை 6 மணிக்கு குடங்களுடன் தங்கள் பகுதியில் எங்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது என அலைந்து, அங்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது.

இவ்வாறு அலைந்தும் தண்ணீர் கிடைக்காதவர்கள் கடைகளில் அதிக விலை ெகாடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 2வது பிளாக் மற்றும் அபிராமி அவென்யூ ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் பழைய பைப்லைனை அகற்றிவிட்டு புதிய பைப்லைன் அமைக்கும் பணி, பல லட்சம் ரூபாய் மதிப்பில் சமீபத்தில் நடைபெற்றது. இனிமேல், குடிநீரில் கழிவுநீர் கலக்காது,  என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

  ஆனால், புதிய  பைப்லைன் அமைத்து மூன்றே மாதத்தில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எப்போதெல்லாம் புகார் வருகிறதோ  அப்போது அங்கு வரும் அதிகாரிகள், பள்ளம் தோண்டி விட்டு இனி இதுபோன்ற பிரச்சனை வராது என கூறிவிட்டு செல்கின்றனர். ஆனால், மீண்டும் சில நாட்களில் அதே பிரச்னை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.   இதுகுறித்து கண்ணதாசன் நகர் 2வது பிளாக் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக இந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது.  அடிக்கடி அதிகாரிகள் வந்து சரிசெய்து விட்டு செல்கின்றனர். மீண்டும் ஒரு வாரத்திற்குள் பழைய நிலைமை ஏற்படுகிறது.

இதனால் இங்குள்ள மக்கள் குழாய்களில் தண்ணீர் பிடிப்பதை  நிறுத்திவிட்டு, கடைகளில் ரூ.30 கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு கண்டிப்பாக இரண்டு கேன்கள் தேவைப்படுகிறது. தண்ணீருக்கு மாதம் ரூ.1800  வரை  செலவு செய்கிறோம். மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் எங்கள் பகுதியில் புதிதாக பைப்புகள்  அமைத்தார்கள். ஆனால், அந்த பைப்லைனில் வரும் தண்ணீரில் மீண்டும் கழிவுநீர் கலந்து வருகிறது. புதிய பைப்லைன் அமைக்கும் பணி பல லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்றது. ஆனால், தரமற்ற  பைப்களை  பயன்படுத்தியதால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்,’’ என்றனர்.

குளிப்பதற்கு கூட சிரமம்
குழாய்களில் வரும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், லாரிகளில் வழங்கப்படும் தண்ணீரை எதிர்பார்த்துள்ளனர். ஆனால், கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக தண்ணீர் விநியோகம் முறையாக செய்வதில்லை. இதனால் இந்த கோடை காலத்திலும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறைேய இப்பகுதி மக்கள் குளிக்கும் நிலை உள்ளது. கொரோனா தொற்று எப்போது நீங்குமோ அப்போதுதான் லாரி தண்ணீர் சரியாக கிடைக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா பிரச்னை எப்போது முடிவது, நாங்கள் எப்போது குளிப்பது என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Tags : Pipeline, Drinking Water Project, Kannadasan Nagar
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100